Sunday, January 23, 2011

சிலப்பதிகாரத்தில் அந்தணர்

சிலப்பதிகாரத்தில் அந்தணர்கள்

பண்டையத் தமிழ் இலக்கியங்களில் அந்தணன், அந்தணர் என்ற
சொற்கள் விரவி வருவதைக் காணலாம். திருக்குறளில் அறவாழி
அந்தணன் என்று இறைவனை இறைஞ்சுவார் குறளாசிரியரான
தேவர் பெருமான். அந்தணர்/அந்தணன் என்ற சொற்கள் பல
சமய இலக்கியங்களில் பயின்று வந்தாலும் அவைகள் ஒரே
பொருளில் ஆளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிலப்பதிகாரத்தில் அந்தணர்/அந்தணன் என்ற சொல்லாட்சி

இன்றைய காலக் கட்டத்தில் ‘அந்தணன்’ அல்லது “அந்தணர்”
என்ற சொல் வைதீகப் பிராமணர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்
பட்டு வருகிறது. அந்த சொற்கள் பொதுமையாயினும் சமண,
பெளத்த இலக்கியங்களில் அவைகள் சமண/பெளத்தப்
பிராமணர்களைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டு
வந்திருப்பதையும்க் காணலாம்.

இளங்கோவடிகள் தன் சிலப்பதிகாரத்தில் மூன்று வகையான
அந்தணர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

1. மாங்காட்டு மறையோன்
2. கோசிகன்
3. மாடல மறையோன்

1. மாங்காட்டு மறையோன்:

காடுகாண் காதையில், கவுந்தியடிகள், கோவலன் மற்றும்
கண்ணகி ஆகியோர் உறையூரை விட்டு நீங்கி ஒரு சோலையின்னுள்
நுழைகின்றனர். அப்போது அங்கிருந்த மண்டபத்தில் மாங்காட்டு
மறையோன் என்ற வயதான வைதிக பிராமணனைச் சந்திக்க
நேரிடுகிறது. அவரை எதிர்க் கொள்ளும் கோவலம் அவனை
வணங்காமல்,

”மாமது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்ஊர்? ஈங்கென் வரவெனக்?
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்..”
1

என்று சற்று அதிகாரத் தொனியிலேயே கேட்கத் துவங்குகிறான்
கோவலன். இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது யாதெனில்,
கோவலன், அந்த வயதான மாமது மறையோனை வணங்குவதாக
காட்டவில்லை இளங்கோவடிகள்.

2. கோசிகன் என்ற மறையோன்

உறையூரை விட்டு நீங்கி வெகு தூரம் நடந்து வந்தக் களைப்பினால்,
ஒரு ஊரின் புறமாக அவர்களை தங்க வைத்துவிட்டு தன் காலை
கடனை முடிக்க நீர் நிலையைத் தேடி செல்கிறான் கோவலன்.
அப்போது, மாதவியின் கடிதத்துடன், கோவலனைத் தேடி
எங்கெல்லாமோ அலைந்து திரிந்து வந்த கோசிகன் என்ற
அந்தணன், இவன் கோவலனோ என்று ஐயுற்று வினவ,
அதற்கு மறுமொழிக் கூறும் கோவலன்,

“யாது நீ கூறிய உரையீது?, இங்னெத்..”2

என்று கேட்கிறான். அப்போதும் அவனை வணங்குவதாகக்
காட்டவில்லை இளங்கோவடிகள்.

3. மாடல மறையோன் என்னும் அந்தணன்

அடைக்கலக் காதையில் மாடல மறையோன் என்னும்
அந்தணனைச் சந்திக்கும் கோவலன், உடனே அவன்
அடிப் பணிகிறான்.

“இடவயிற் புகுந்தோன் தன்னைக்
கோவலன் சென்று சேவடிவணங்க
நாவல் அந்தணன் றானவின் றுரைப்பான்” 3


மற்ற அந்தணர்களை வணங்குவதாகக் காட்டாத
இளங்கோவடிகள், மாடலன் என்ற அந்தணனை,
கோவலன் அடி வணங்குவதாகக் காட்டுகிறார்?

ஏன்? நிற்க!

அறக்கள வேள்வியும் மறக்கள வேள்வியும்

இளங்கோவடிகள் தன் காப்பியத்தில் மூன்றுவித வேள்விகளை
நமக்கு காட்டுகிறார்.

1. மறக்கள வேள்வி
2. மதுக்கொள் வேள்வி
3. அறக்கள வேள்வி

1. மறக்கள வேள்வி

முதல் இரண்டும் வைதிகம் சார்ந்தது. மூன்றாவது அவைதிகச்
சார்பு உடையது. மாடல மறையோன் மூன்றாம் பிரிவினன்.
சேரனுக்கு அறிவுரை வழங்கு மாடலன் அரசே மது,
கொலை உடைய மறக்கள வேள்வி செய்யாதே.
கொலையில்லாத அறக்கள வேள்வி செய் என்று
அறிவுறுத்துகிறான்.

“அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோயாயினை “ 4


என்றும்,

“..அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்..” 5


என்று சேரனுக்கு அறிவுறுத்துகிறான் மாடலன்.

இங்கு சொல்லப்பட்ட அறக்கள வேள்வி யாதுனெனின்,
இது அவைதிகச் சார்புக் கொண்ட வேள்வியாம்.அவைதிகப்
பிரிவினரான சமணர்களுக்கும் வேள்வி உண்டென்றும்,
ஆனால் அது உயிர்ப் பலி மற்றும் மது (சோம பானம்)
இல்லாத வேள்வி என்றும் பெறப்படுகிறது. சமணர்கள்
அந்த வேள்வியை ”ஓமம்” என்று அழைக்கிறார்கள்.
(இன்றும் சமணர்கள் புதுமனை புகுவிழாவில் சாந்திநாத
ஓமம் என்ற வேள்வியைச் செய்கிறார்கள் என்பதைக்
கருதவும்)

மாடலன் மறையோன் சமண அந்தணன்

மூன்று அந்தணர்களைக் குறிக்கும் இளங்கோவடிகள்,
கோவலனை மற்ற இருவரையும் அடிவணங்கச் செய்யாமல்,
மாடலன் மறையோனைக் கண்டவுடன் அடிவணங்கச்
செய்தமை இதன் பொருட்டாம்! என்னை?


நான்மறைகள்

இங்கே வாசகர்களுக்கு ஒரு வினா எழுவது இயல்பே?.
நான்மறை என்பது வைதிக வேதங்களைத் தானேக்
குறிக்கும்? என்றால்..

இல்லை. அவைகள் சமண வேதங்களையும் குறிக்கும்.
சமண இலக்கியங்களில் நான்மறை என்றும் வேதம்
என்ற பதங்கள் விரவி வருவதைக் காணலாம்.

சமண வேதங்கள் நான்கு!

ஜைன ஆகமங்களை இரண்டு வகையாகப் பிரிப்பர்.
அவை பூர்வாகமம், அங்காகமம் எனப்படும். பூர்வாகமம்
என்பது என்றும் நிலைத்திருப்பது. ஆதி பகவானால்
அருளப் பட்டது. அங்காகமம் என்பது மனிதர்களால்
எழுதப்பட்டது. ஆதிபகவன் என்று அழைக்கப்படும்
ஆதிநாதரால் அருளப்பட்ட அகமங்கள் நான்கு. இவை
ஜைன வேதங்கள் அல்லது சதுர் வேதங்கள் அல்லது
நான்மறைகள்6 என்றழைக்கப்படுகின்றன. அவைகள்,

1. பிராதமானுயோகம்
2. கரணானுயோகம்
3. சரணானுயோகம்
4. திரவியானுயோகம்

என்பன.

முடிபு:

”அந்தணர் என்போர் அறவோர்”7 என்பது திருக்குறள் வாக்கு.
எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல், எந்த உயிரையும்
வேள்விகளில் பலி கொடுக்காமல் இருப்பவர்கள் தான்
அந்தணர் என்று திருக்குறள் சொல்வது இங்கு
நினைத்தற்பாலது!



இரா.பானுகுமார்,
சென்னை






அடிக்குறிப்பு:

1. சிலப்பதிகாரம், காடுகாண் காதை, பாடல் 31 - 33
2. சிலப்பதிகாரம், புறஞ்சேரி இறுத்த காதை, பாடல்: 54
3. சிலப்பதிகாரம், அடைக்கல காதை, பாடல்: 18 - 20
4. சிலப்பதிகாரம், நடுகற் காதை, பாடல்: 131 – 132
5. சிலப்பதிகாரம், நடுகற் காதை, பாடல்: 177 – 178
6. பதிணென் கீழ்க்கணக்கு, ஏலாதி- கடவுள் வாழ்த்து
” அறுநால்வ ராய்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வழங்கிப் - பெறுநால்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்(கு)
இறைபுரிந்து வாழ்தல் இயல்பு” – பாடல் – 1

7. திருக்குறள், நீத்தார் பெருமை, பாடல் - 30

Thursday, January 20, 2011

எண்ண வண்ணங்கள் (நிறம்)

எண்ண வரண்ணங்கள்

சமணம் மனிதனின் மனதில் தோன்றும் எண்ணங்களை கொண்டு, வெண்மை,
கருமை என்று இரண்டு வகையாகப் பிரிக்கிறது. எண்ணத்தின்
தன்மைக்கேற்றவாறு அவற்றை மேலும் விரித்து ஆறு வகைகளாகப் பிரிக்கும்.

1. கிருட்டினலேசியை – அடர்ந்த கருமை (Dark Black)
2. நீலலேசியை – நீலம் கலந்த கருமை (Black)
3. கபோதலேசியை – வெண்மை கலந்த கருமை (Grey)
4. பீதலேசியை – மஞ்சள் கலந்த வெண்மை (Pale yellow)
5. பத்மலேசியை – மங்கலான வெண்மை (Pale white)
6. சுக்லலேசியை – தூய வெண்மை (Pure White)

முதல் மூன்றும் கருமை எண்ணங்களாகும், மற்ற மூன்றும் வெண்மை
எண்ணங்களாகும்.

1. மிகுந்த கருமை – சதா சச்சரவு செய்யும் தன்மை, கடின மனயில்பு,
பழிவாங்கும் உணர்ச்சி, பெரியவர்கள் பேச்சை ஏற்காமை.

2. கருமை – சோம்பல், அறிவின்மை, சுகங்களில் அதிக நாட்டம்.

3. வெண்மை கலந்த கருமை – எதற்கெடுதாலும் அவசரப்படுதல்,
பயப்படுதல், மன உறுதியின்மை, காரணமேயின்றி பிறரை வெறுத்தல்.

4. மஞ்சள் கலந்த வெண்மை – நன்மை-தீமைகளை சீர்த்தூக்கிப் பார்த்தல்,
தயை, பரிவுத் தன்மை, தானம் செய்தல்.

5. மங்கலான வெண்மை – உண்மை, நேர்மை மனத்தினர், தியாக
சிந்தனை, மன்னிக்கும் இயல்பு, குருவை மதித்தல்.

6. தூய வெண்மை – சமநோக்கு உடைமை, விறுப்பு, வெறுப்பு
இன்மை, கோபம் கொள்ளாமை.



[படம்: http://en.wikipedia.org/wiki/Lesya - நன்றி!]

இப்போது சொல்லுங்கள் நீங்கள் எந்த நிறம்? ;-)


இரா.பா,
சென்னை

சிராவகர் அல்லது சாவகர்

சிராவகர் யார்?

சிலப்பதிகாரத்தில் வரும் “சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்” என்ற
வரியில் வரும்
”சாவக” என்ற சொல்லுக்கு பொருள் யாது என்பது தான் இங்கு (மின்தமிழ் குழுமம்)
விவாதிக்கப்பட்டு வருகிறது. சிராவகர் என்ற வடமொழிச் சொல் தமிழிலும்,
பிராகிருதத்திலும் சாவகர் என்று வரும். சாவகர் என்பது சமண
இல்லறத்தார்களைக் குறிக்கும். அதே சமயம், பெளத்த நூல்களில் அந்த
சொல் பெளத்த முனிவர்களைக் குறிக்கப் பயன்படுவதுண்டு. இடத்திற்கேற்றாற்
போல் பொருள் கொள்ளவேண்டும். என்னை? :-)

ஜைன துறவறத்தார் சிரமணர் அல்லது சமணர் என்று அழைக்கப்படுவர்.
(சமணர் என்றால் ஆசிவகரையும் குறிக்கும் என்று சில ‘அறிஞர்கள்”
கூறுவதுண்டு. அது பொருந்தாது. ஆதாரத்துடன் நிறுவ முடியும். பிறகு
ஒரு நாளில் இங்கு எழுதுவேன்) ஜைன இல்லறத்தார் சிராவகர் அல்லது
சாவகர். சமணர் ஏற்பது மகாவிரதம். சிராவகர் ஏற்பது அணுவிரதம்.
விரதம் இருவருக்கும் பெயரளவில் ஒன்றே ஆனாலும் அவற்றின்
“Magnitude” ல் சிறிய வேறுபாடுண்டு.

சாவக தர்மம் மனையறம் என்று அழைக்கப்படுவது போல், சாவகர்களை
இல்லற நோன்பிகள், உலக நோன்பிகள், இல்லற விரதிகள் போன்ற
சொற்களாலும் அழைக்கப்படுகிறார்கள்.

விரதம் அல்லது நோன்பு

சிராவகர்கள் ஒழுகவேண்டிய விரதங்கள் பத்தாம். அவற்றுள் முதல்
ஐந்தும் ”அணுவிரதம்” என்றழைப்படும். இந்த அணுவிரதத்தை
அனைத்து சமண இல்லறத்தார்களும் கடைப்பிடிக்கவேண்டும் என்று
சமணம் சொல்லும்.

1. கொல்லாமை (ஓரறிவு உயிர்கள் விலக்கு)
2. பொய்யாமை
3. கள்ளாமை
4. பிறன்மனை விரும்பாமை
5. மிகுபொருள் விரும்பாமை

(இவைகள் அணுவிரதம் என்றழைக்கப்படும்)

6. ஊன் உண்ணாமை
7. கள் உண்ணாமை
8. தேன் உண்ணாமை
9. இரவு உண்ணாமை
10. குரவரை இகழாமை

இவற்றை திருக்கலம்பகம் என்ற நூல் அழகாகத்
தொகுத்துரைக்கும்.

“விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
விழைவார், கொலையினை விழையார்; பொய்
உரையார்; களவினை ஒழுகார்; பிறர்மனை
உவவார்; மிகுபொருள் உவவார்; வெம்
கரையால் உணர்வினை அழியார்; அழிதசை
துவ்வார்; விடமென வெவ்வாறும்
புரையார்; நறவினை நுகரார்; இரவுணல்
புகழார்; குரவரை இகழாரே” – திருக்கலம்பகம் (67)

அணுவிரத்தை அருங்கலச் செப்பு என்ற நூல்,

“பெரிய கொலை, பொய், களவொடு, காமம்
பொருளை வரைதலோடு ஐந்து” – அருங்கலச் செப்பு (66)

மேற்சொன்ன விரதங்களை கடைப்பிடிக்கவேண்டியது சாவகரின்
(இல்லறத்தார்) கடமை. எல்லாவற்றையும் கடைப்பிடித்தே ஆக
வேண்டும் என்று சமணம் எப்போதும் வற்புறுத்தியதில்லை.
தாங்கள், தங்கள் சக்திக்கு ஏற்ப முழு மனத்தோடுக்
கடைப்பிடிக்கவேண்டும் என்று தான் சமணம் சொல்கிறது.



இரா.பா,
சென்னை

Sunday, January 16, 2011

இருவினை சேரா இறைவன் - 2

இருவினை சேரா இறைவன் - 2

அவர்களது உரையாடல் தொடர்கிறது….

(அன்று மாட்டு பொங்கல். மாலை நேரம். அந்த ஆசிரியர் எதோ எழுதிக் கொண்டியிருக்கிறார்)

மாணவன்: ஐயா, பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

ஆசிரியர்: பொங்கல் வாழ்த்துக்கள் தம்பி. பார்த்து நிறைய நாள்கள் ஆகிவிட்டது இல்லையா?

மாணவன்: ஆமாம் ஐயா. அன்றொரு நாள் இருவினைப் பற்றி தாங்கள் கூறியிருந்தீர்கள்? இல்லையா? அந்த கருத்தைப் பற்றி என் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் அதற்கு எதிர்வினையாக சில கேள்விகள் கேட்கிறார்கள்?

ஆசிரியர்: எதிர்வினை இல்லையென்றால் தெளிவுக் கிடைக்காது தம்பி. ஒரு கருத்தை எல்லா தளத்திலிருந்தும் புரிந்துக் கொள்ள அவை உதவும். புரிதல் வசப்படும். ஒவ்வொன்றாக கேள் என்னால் முடிந்தவரை விடைக் காண முயல்கிறேன்!

மாணவன்: ஐயா,

“இருள்சேர் இருவினை சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”


இந்த குறளுக்கு பரிமேலழகர் உரை இவ்வாறு சொல்கிறது.

“இருள் சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.

விரிவுரையில்,

இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின், அவிச்சையை “இருள்” என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையார் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே ‘பொருள்சேர் புகழ்’ எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்.


மணக்குடவரும் இக்குறளுக்கு இவ்வாறு பொருள் கூறுகிறார்.

“மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை, தீவினையென்னுமிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிக் சொற்களைப் பொருந்தினர் மாட்டு".

இவ்விரண்டு உரைகளும் ஒரே பொருளை தருவதாக நான் கருதுகிறேன் ஐயா. தாங்கள் விளக்க முடியுமா?

ஆசிரியர்: நன்று தம்பி. எல்லோர் உரையும் படித்திருக்கிறாய் போலியிருக்கிறது. இந்த குறள் என்றில்லை, கடவுள் வாழ்த்தில் உள்ள மற்ற குறளும் எல்லாருக்கும் மயக்கமே தருகிறது.
கடவுள் வாழ்த்தில் உள்ள பத்துக் குறள்களில் கடவுளை நேரடையாக விளிக்கும் சொற்றொடர்களை முதலில்ப் பார்ப்போம்.

1.ஆதிபகவன்
2. வாலறிவன்
3. மலர்மிசை ஏகினான்
4. வேண்டுதல் வேண்டாமை இலான்
5. பொறிவாயில் ஐந்தவித்தான்
6. தனக்குவமை இல்லாதான்
7. அறவாழி அந்தணன்
8. எண்குணத்தான்

மற்ற இரு குறள்களிலும் பொதுவாக இறைவன் என்றேக் கூறப்படுகிறது!

மாணவன்: (குறிக்கிட்டு) ஏன் சொற்றொடர்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்? முழுக் குறளையும் எடுத்துக் கொண்டு ஆராயலாமே, ஐயா?

ஆசிரியர்: பொறுமை தம்பி! முழுக் குறளையும் ஆராய்வோம். நான் சொல்வதைக் கேள். பிறகு உன் கேள்விகளை கேள்? சரியா!

மாணவன்: சரி ஐயா! தாங்கள் தொடருங்கள்.

ஆசிரியர்: எந்த ஒரு நூலாசிரியரும் தான் வழிப்படும் கடவுளைரைத் தான் பாடுவாரேயன்றி, ஒரு பாட்டில் தன் சமயக் கடவுளையும், மற்ற பாட்டுகளில் மற்ற சமயக் கடவுளரை பாடியதாக எங்ஙனமும் அமையவில்லை. அதனால் கடவுள் வாழ்த்தில் கூறப்படுபவர் எந்தக் கடவுள் என்று அந்த சொற்றொடர்களை ஆராய்ந்து, பின் முழுக் குறளையும் பார்க்கலாம்.

அந்தச் சொற்றொடர்களை ஆயும் முன்னர், தமிழ்த் தென்றல். திரு.வி.க அவர்களின் கூற்றை சிறிதுப் படித்துவிட்டு மேற்செல்லலாம். என்னை?

”ஒவ்வொன்றற்கும் புறமும் அகமும் இருத்தல்போலச் சமயத்துக்கும் புறமும் அகமும் இருக்கின்றன. சமயத்தின் புறத்தை நோக்கும்[போது பன்மைக் காட்சியும், அதன் அகத்தை யுணரும்போது ஒருமையுணர்வுந் தோன்றும். புறப் பன்மையைச் சமயவாதிகள் சமயங்கொண்டு கலாம் விளைக்கிறார்கள்”

இங்கே புறம் என்பதை புறச்சான்றுகள் (External Evidences) என்றும் அகம் என்பதை தத்துவம் (Philosophy) என்றும் எடுத்துக் கொள்ளலாம்.புறச் சான்றுகள் என்ற வகையில், எல்லா சமயங்களுக்கும் (பெளத்தம், சைவம், வைணவம்) பொதுமையுண்டு. இதை வைத்து நாம் எல்லோரும் வாதம், பிரதிவாதம் செய்கிறோம். ஆனால் அகத்தை உணரும்போதுதான் சமயங்களின் ஒருமைத் தன்மை வெளித் தெரிகிறது. இந்தியச் சமயங்களில் புறத் தன்மைகள் ஒன்றுபோலவே அமையும். ஆனால், அவற்றின் அகத் தன்மையில் அவைகள் மாறுப்பட்டேயிருக்கும். காட்டாக, வினைக் கொள்கைகள் எல்லா இந்தியச் சமயங்களுக்கும் பொதுவேயாயினும் அவை சமணத்திற்கே உரிய சிறப்புக் கோட்பாடு.

புறத்தன்மையை (External Evidences) எடுத்துக் கொண்டாலும் சமண இலக்கியங்களில்தான் மேற்சொன்ன சொற்றோடர்கள் 3:1 என்ற விகிதத்தில் அவைகள் விரவி வருகின்றன. அவ்வகையில் பார்த்தாலும் அவைகள் சமணம் சார்ந்தேயிருக்கின்றன என்பது அங்ஙகை நெல்லிக் கனி.
அகத்தன்மைக்குள் புகும் முன் தமிழ்த் தென்றல். திரு.வி.க அவர்கள் சொல்வதைப் பார்த்துவிட்டு முன் செல்வோம்.

”திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் ஒரிடத்தில் ஒரு திறவு வைத்துள்ளார். அதற்கு அரணாக நூலினுள் பல குறிப்புக்களுண்டு. “பொறிவாயில் ஐந்தவித்தான்:” என்பது அத்திறவு. அத்திறவு கொண்டு கடவுள் வாழ்த்தைத் திறந்து பார்த்தல் வேண்டும்.

பொறிவாயில் ஐந்தவித்தான் என்பது ஒருபோது பொறி வாயில் ஐந்துடையானைக் குறித்தல் வெள்ளிடைமலை. முதலில் பொறி வாயில் ஐந்துடையனாயிருந்து, பின்னை அவ்வைந்தவித்த ஒருவனைத் திருவள்ளுவர் “ஆதிபகவன்” என்று போற்றியிருக்கிறாரென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குவ தொன்று. பொறி வாயில் ஐந்துடையனாய்ப் பின்னை அவ்வைந்தவித்த ஒருவனை ஆதிபகவனாகப் போற்றுவது எச்சமயம்?

எங்கும் நீக்கமற நிறைந்து அசைவற்ற ஒன்றை ஜைநம் மறுக்கின்றதில்லை. அவ்வசைவற்ற ஒன்று ஐந்தொழில் புரியா தென்பது ஜைந சித்தாந்தம். “உற்பத்தியு நாசமும் ஒன்றுமில்லாத பரஞ்சுடரே” என்பது ஜைநர் திருநூற்றந்தாதி.

எங்கும் நிறைந்த அசைவற்ற ஒன்றை ஜைநமும் ஏற்கிறது; சைவமும் ஏற்கிறது. ஜைநம் அசைவற்ற ஒன்றிற்கு ஐந்தொழில் கூறுவதில்லை. சைவம் பரம்பொருளுக்கு இருநிலை வகுத்து, ஒன்றற்கு ஐந்தொழிலின்மையும், மற்றதற்குத் தொழிலுண்மையுங் கூறுகிறது. அவ்விருநிலை சொரூபம் தடத்தம் என்பன. பொரூப சிவத்துக்கு ஒன்றுமில்லை. “சிவனரு வுருவுமல்லன் சித்தினோட சித்துமல்லன் – பவமுதற் றெழில்களொன்றும் பண்ணிடுவரனுமல்லன்” (சைவ சாத்திரம்). தடத்த சிவத்துக்கு ஐந்தொழிலுண்டு.

தடத்த சிவத்தைப் “பொறிவாயில் ஐந்தவி ஆதிபகவனாகக் கோடலாகாதோ வெனில், சைவ சாத்திர முறைப்படி கோடலாகா தென்க. பிறவியெடுத்தல், பொறிவாயில் ஐந்து பெறல், பின்னே அவைகளை அவித்தல் முதலியன பசு விலக்கண மெனச் சைவ சாத்திரஞ் சாற்றுகிறது. தடத்த சிவத்தையும் பசு வர்க்கத்தில் சைவ சாத்திரஞ் சேர்த்ததில்லை. ஆதலால் திருவள்ளுவர் வழுத்திய ஆதிபகவனைத் தடத்த சிவமாகக் கோடற்கு மிடமில்லை யென்க. கடவுளியலில் ஜைநமும் சைவமும் பிரியுமிடமிதுவாகும்.”


இவ்வாறு அகத் தன்மையில் பார்த்தாலும் மேற்சொன்ன சொற்றொடர்கள் சமண சமயத்திற்கு இயைந்தேயிருக்கின்றன!. என்னை?

பொறிவாயில் ஐந்தவித்தான் சிவனை, திருமாலைக் குறிக்கும் என்று வாதிட்டு போர்த்துறை நண்ணுவது மடமையாம். என்னை?

கடவுள் வாழ்த்தில் கூறப்பட்டுள்ள சொற்றொடர்கள் மனிதனாகப் பிறந்து, பின்னை இறைவனாக உயர்ந்த ஆன்மாவைக் குறித்தே சொல்கிறதேயன்றி எல்லாம் வல்ல பெரும்பொருளை அவைகள் குறிக்காது.

(ஆசிரியர், தன் பேச்சைச் சிறிது நிறுத்துகிறார்)

மாணவன்: ஆகா, நீண்ட விளக்கத்திற்கு நன்றி ஐயா! தற்போது முழுக்குறளையும் விளக்க வேண்டுகிறேன்?

ஆசிரியர்: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”.
இதில் ஒன்றை நுணுகியாராய்ந்துப் பார்த்தல் நன்றமையும் தம்பி.

குறளாசிரியர் ”இறைவன் புகழ் புரிந்தார் மாட்டு”, அதாவது “இறைவனுடைய கீர்த்தியை விரும்பினவரிடத்து” என இறைவனது கீர்த்தியைச் சொல்லாமல், இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார்” என விதந்துக் கூறுவதினால், இறைவனால் அருளப்பட்ட அறத்தை விரும்பினவரிடத்து (அவர் வழி சென்றவரிடத்து)காதி, அகாதி வினைகளான இருவினையும் சேராது என்பது அக்குறளின் கருத்து.

இவற்றை ஒட்டியே யசோதர காவியம்,

“இருள்புரி வினைகள் சேரா இறைவன் அறத்தை எய்தின்..”

என்றும்,

“இருள்புரி உலகஞ் சேரா வியநெறி பயந்த பெம்மான்
பொருள்புரி விழவு காண்பார் புண்ணிய உலகங் காண்பார்”

என்றும் வருவதைக் காணலாம்.

மாணவன்: அற்புதமான விளக்கம். நேரம் ஆகிவிட்டதால் பிறிதொரு நாளில்
மீண்டும் உரையாடுவோம் ஐயா!

ஆசிரியர்: நன்று தம்பி. அப்படியே ஆகட்டும். சென்று வா!
(மாணவன் விடைபெற்று வீடு திரும்புகிறான்)

தொடரும்…

இரா.பானுகுமார்,
சென்னை